Breaking News

உதிர்ந்த மலரும் நினைவுகள் | ஒரு கிராமத்தானின் கிறுக்கல்கள்



என் கிராமத்து வாழ்க்கை - அது ஒரு கனாகாலம்
தல நாற்று:

நாற்று நடவு காலங்களில், வரப்புகளிலும், வயலை ஒட்டிய சின்ன சாலைகளிலும் தல நாற்று என்ற ஒன்றை (ஒற்றை நாற்றுக்கட்டு) வைத்து, அந்த வழியே போவோவரிடம் காசு கேட்பார்கள், நடவுப் பெண்கள்.

மாமா, மச்சான், கொழுந்தியா கிண்டல்கள் சத்தமாகப் பேசப்படும். அதுவும் கொழுந்தியா, அத்தை மகள் வகையறா.. முறைப்பெண்கள் இருந்துவிட்டால் அவ்வழியே செல்லும் ஆண்களுக்கு திண்டாட்டம் தான்.

காசு போட்டால் பெண்களின் குலவை ஒலி இலவசம். நன்றாக தெரிந்தவர்கள் வந்தால் கண்ணில் பட்டவுடன் குலவை ஒலியை தொடங்கி விடுவார்கள். காசு போடாமல் நகர முடியாது. பைக்கில் போகும் மைனர்கள் அதிக காசு போடுவார்கள்.

சின்ன வயதில் காசு இல்லை போடுவதற்கு. இப்போது ஒவ்வொரு முறை ஊர் போகும் போது யாராவது கேட்க மாட்டார்களா என்று இருக்கும். வயல்கள் அழிந்த நிலையில், கேட்பதற்கு யாரும் இல்லை.ஏன் இன்னும் சொல்லபோனால் இன்னும் கொஞ்ச நாள்களில் நடவு நட தெரிந்தவர்கள் இருபர்களா என்றே தெரியாது

என் சின்ன வயது அக்காமார்களும், பாட்டிமார்களும் மட்டுமே கனவாக வந்து போகிறார்கள்.

கமலை: (ஏற்றம் இரைத்தல்)

புன்செய் நிலங்கள் மோட்டார் தோட்டமாக மாறுவதற்கு முன், மாடுகள் பூட்டி நீர் இழுக்கும் கமலைகளின் (சால்) பெரிய அண்டா போன்ற பாத்திரமும் (தக‌ரத்தில் செய்யப்பட்ட ஒன்று) அதன் வாய்ப்பகுதியில் இருக்கும் தோல் பையும் (வால் பை) இன்னும் கண்ணில் இருக்கிறது.
 
இழுத்த தண்ணீர் மேலே வந்தவுடன், அண்டாவைக் கவிழ்ப்பது போல செய்ய, இழுக்கும் கயிற்றில் ஏறி உட்கார்ந்து கீழ்நோக்கி அமுக்க வேண்டும். ஒரு வகையாக உட்கார்ந்து செய்ய வேண்டும். பலமுறை அந்த வால்ப்பை கயிறு அறுந்து கீழே விழுந்து இருக்கிறேன். சந்திரி குசும்பு பிடித்த காளைகளிடம் உதையும் வாங்கி இருக்கிறேன்

கமலை இறைத்த  காலங்கள் நினைவில் வந்து போகிறது. தேவையற்றுப் போய்விட்ட திறன்களால், மனிதர்களும் மண்ணும் தேவையற்றுப்போய் விட்டது.

கட்டை வண்டி:

கட்டை வண்டியில் குப்பை அள்ளிக்கொண்டு நெடும்தூரம் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வது, நெல் அரைக்க செல்வது, கோவில்களுக்கு செல்வது எல்லாம் வழக்கம், ஏன் இன்னும் சொல்லப்போனால் அன்றைய ஆம்புலன்ஸ்-சும் அதுதான் பல பெண்களின் பிரசவம் பலரின் உயிரை காப்பாற்றிய கட்டைவண்டியும் இன்று பயனற்று மாட்டு தொழுவத்தில் காட்சி பொருளாய் பழைய பொருட்களை தாங்கி நிற்கிறது. 
விவசாய காலங்களில் ஏர் ஒட்டுதல் , பரம்பு இழுத்தல் என்று எல்லாத்தையும் செய்திருக்கிறேன். ஏர் காலையில் 7மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணி ஏன் மாலை 4 மணிவரை கூட சில சமயம் ஒட்டி இருக்கிறேன். காலையில் நீராகரம் 8 மணிக்கு 10 மணிக்கு காலை உணவு. மதியம் 2 மணிக்கு சாப்பாடு என காலத்தை பள்ளி படிப்போடு செய்தோம்.

கட்டை வண்டி, டயர் வண்டியாக மாறி, ட்ராக்டர் + ட்ரக் ஆக கண்முன்னே மாறி பழமை ஒழிந்துவிட்டது. பழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில் இருக்கிறேன். கனவும் நினைவும் மட்டுமே எச்சங்கள்.
கணினியில் அமர்ந்து எழுதும்போது சில பழைய ஞாபகங்கள் கண்ணீரையும் வரவழைக்கும்...!
என் ஊர் என் மக்கள் என்று இருந்த நான்...! பணம் பதவி என்று வாழ்கையின் அத்தியாவசியத்தை நோக்கி இயந்திர வாழ்க்கையோடு நகர்ந்து கொண்டிருக்கிறேன்சொந்த வீடு, ஊர்லாம் விட்டுட்டு ஏன் வெளியூர்ல தனியா கஷ்டப்படனும்ன்னு கேள்வியெழுந்து பதிலே கிடைக்காம இயந்திர வாழ்கையில் சுழன்று கொண்டிருக்கின்றேன்...!

No comments